என் இரட்சகர் ஆலய ஊழிய உருவாக்கம்
இந்தியாவில் எனது வேதாகம கல்லூரியை முடித்த பிற்பாடு இறைவன் அழைத்த அழைப்புக்கு கீழ்படிந்து இலங்கை நாட்டின் யுத்த சூழ்நிலைகளிலும் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு குடும்பமாக வந்தேன்.
அதே வருடம் டிசம்பர் மாதம் குடும்பமாக மன்னாருக்கு வந்து வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பதற்காக அலைந்து திரிந்தும் பொருத்தமாக ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால், இறுதியாக ஒரே ஒரு அறை 10 அடி நீளமும் 10 அடி அகலமுமான ஒரு வீட்டின் பகுதி மட்டும் கிடைக்கவே மன்னாரில் எனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் தற்காலிகமாக குடியேறினோம். அந்த அறை தான் எமது சமையல் அறை, படுக்கும் அறை, வரவேற்பு அறை எல்லாமுமாக இருந்தது. அக்காலத்தில் மன்னாரில் இருந்த கிறிஸ்தவர்கள் யாருமே எம்மைக் ஆதரிக்கவில்லை, கண்டு கொள்ளவில்லை. பல சபை ஆராதனைகளுக்கு சென்றிருந்தோம், ஆனால் அவைகளில் எமக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் நாங்கள் மட்டும் எங்களுடைய அந்த சிறிய அறையிலே குடும்பமாக தேவனை ஆராதித்து வந்தோம்.
அக்கால கட்டத்தில் என்னுடைய மனதில் மன்னாரில் ஊழியம் ஆரம்பிக்கக் வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. மாறாக மட்டக்களப்பு அல்லது திருகோணமலை மாவட்டத்தில் ஊழியம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில், "இங்கேயும் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு, தரித்திரு" என்ற தேவனுடைய சத்தத்தைக் கேட்டேன், அந்த நாள் அதிகாலையில் நானும் எனது மனைவியாரும் எழுந்து ஜெபித்தபோது, எனது மனைவியார் என்னிடம் ஏன் நாம் இங்கு ஊழியத்தை ஆரம்பிக்கக் கூடாது என்றார். இந்த இரண்டு வழிகளிலும் தேவன் எம்மை நடத்துகிறார் என்று விசுவாசித்தோம்.
அதன் பிற்பாடு ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினரின் அறிமுகம் கிடைக்கவே, 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 திகதி அவர்களுடைய குடிசை வீட்டின் விறாந்தையில் தேவனை ஆராதிக்கத் தொடங்கினோம். 1989 ஆம் ஆண்டு ஆலயத்திற்காக ஒரு இடம்வேண்டக் கூடியதாக தேவன் அருள் செய்தார். முழுவதும் காடுகளாகவும், மந்தைகளின் மேய்ச்சல் இடமாகவும் இருந்த அவ்விடத்தை நாம் துப்புரவு செய்து ஒரு கூடாரம் அமைத்து அங்கு தேவனை ஆராதிக்கத் தொடங்கினோம்.
எமது ஆரம்ப ஊழிய நாட்களில் எனது மனைவியும் நானும் நடந்து திரிந்து தேவனுடைய சுவிசேஷத்தை சொன்னோம். பின் ஒரு துவிச் சக்கரவண்டி கிடைத்தது. நானும் எனது விசுவாசிகளில் சிலருமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கிராமம் கிராமமாக சென்று தேவனுடைய வார்த்தையை சொன்னோம். சில நாளில் 140 km கூட நாம் சென்றதுண்டு. அந்நாட்களில் நாட்டின் யுத்த சூழ்நிலை காரணமாகவும், இந்திய இராணுவத்தின் கெடுபிடி காரணமாகவும் சில வேளைகளில் மூன்று நாட்களுக்கு பின் வீட்டிற்கு வருவதுமுண்டு. இப்படி பல நெருக்கத்தின் மத்தியிலும் தேவ ஊழியத்தை செய்து வந்தோம். 1990 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரே நாளில் 15 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் கடும் யுத்த நிலவரம் காரணமாக எமது சபை சிதறுண்டு போனது பல விசுவாசிகள் இந்தியாவிற்கு சென்றார்கள் சுமார் 75 விசுவாசிகள் என்னுடன் எனது சொந்த ஊரான கள்ளியடிக்கு வந்தனர்
இந்தியாவின் பல முகாம்களிலே எமது விசுவாசிகள் சிதறுண்டிருந்தார்கள். 1990 ஆம் ஆண்டு நான் இந்தியா சென்று அவர்களிடையே மன்னாரில் ஏற்கனவே உருவாக்கிய தலைவர்களை கொண்டு அங்கே அவர்கள் தேவனை ஆராதிக்க வழி வகை செய்து, முகாம் ஊழியங்களை ஆரம்பித்தோம்.
இந்திய ஊழியங்களை முடித்த பிற்பாடு 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அதிகாலையில் நான் இந்தியாவில் இருந்து வரும் போது (அவ் வேளையில் கடல் மார்க்கம் மட்டும் ஒரே வழியாக காணபட்டது), இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, தள்ளாடி முகாமில்அடைக்கப்பட்டு, பல சித்திரவதைகளை அனுபவித்து, 41 நாட்கள் விலங்கு மாட்டப்பட்டு, அடைபட்டிருந்தேன். இந்த நாட்களில் இந்த ஊழியம் முடிந்து விட்டது, போதகரைக் கொன்று விட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் கர்த்தர் மீண்டும் 1991 ஆம் ஆண்டு என்னை வெளியே கொண்டு வந்தார் அக்கால பகுதியில் மன்னார் நகருக்கு வர முடியாத சூழ்நிலை காணப்படவே கள்ளியடிப் பிரதேசத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நாட்களில் முதலாவது கிளைச் சபையை நாச்சிக்குடா பகுதியில் ஆரம்பித்தோம்,
பின்பு திரும்பவும் 1992 ஆம் ஆண்டு மன்னாரில் ஊழியத்தை தொடர கர்த்தர் உதவிசெய்தார் இரண்டு வருடங்களாக யாருமற்று பாழடைந்து கிடந்த ஆலயத்தை மீண்டும் சுத்திகரித்து தேவனை ஆராதிக்கத் தொடங்கினோம். அதே காலப்பகுதியில் மீண்டும் (1992 ஆம் ஆண்டு) இராணுவத்தினரால் பிடிபட்டு, சில மணி நேரங்கள் அடைக்கப்பட்டிருந்தேன். இப்படி பல சூழ்நிலைகளின் மத்தியிலும் அஞ்சாமல் தேவ ஊழியத்தை செய்து வந்தேன். பின்பு, 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவனுடைய நடத்துதலின்படி இப்போதிருக்கிற இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டோம். அப்போது எங்கள் கைகளில் 1000 ரூபா காசு கூட இருக்கவில்லை. ஆனால் கர்த்தரை மட்டுமே நம்பி ஆரம்பித்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இந்த நல்ல, அழகான ஆலயத்தைக் கட்டி முடிக்க கர்த்தர் உதவி செய்தார்.
எமது சபை ஊழியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நட்பின் ஊழியமும், தனி நபர் சுவிசேஷ ஊழியமுமே தான். இதன் மூலமாக அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த முடிந்தது, அதே வேளையில் நாம் பல தலைவர்களை உருவாக்க கர்த்தர் உதவிசெய்தார். தலைவர்களை உருவாக்குவதிலே பல பிரச்சனைகளை எதிர் நோக்கவேண்டியிருந்தது. உருவாக்கப்பட்ட தலைவர்கள் எல்லாரும் விசுவாசமாக இருந்தார்கள் என்றில்லை சிலர் துரோகம் செய்தார்கள். ஆனால் அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் நாம் சோர்ந்து போகவில்லை. கிளை சபை ஊழியங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. இப்படி இருந்த கால கட்டத்தில் யுத்த சூழ்நிலை காரணமாக வேறு மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தவர்கள் மத்தியிலும் கர்த்தருடைய ஊழியத்தை செய்தோம். அவர்கள் திரும்ப தங்களுடைய இடங்களுக்கு போகும் போது எமது ஊழியங்கள் வளர் ஆரம்பித்தது. இவ்வாறு பல கஷ்டங்களின் மத்தியிலும் வளர்ந்த ஊழியமானது, கர்த்தருடைய கிருபையினாலே இன்று இலங்கையின் வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலே 23 கிளை சபைகள், ஒரு சிறுவர் இல்லம் கொண்டு அநேக ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவி செய்திருக்கிறார்.